செல் போனில் இருந்து வரும் ஒரு ஆபத்து.

2 கருத்துகள்
TwitThis


இன்றைய அறிவியல் உலகம் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் மூலம் மிக உன்னதமான பிணைப்பை உலக மக்களிடையே எளிமையாக்கிவிட்டது.

கண்ணிமைக்கும் நேரத்தில் கடல் கடந்து பறக்கும் குரல் ஒலிகளின் ஒப்புயவர்வற்ற செயல்பாடுகளுக்கு செல்பேசி முக்கிய பங்காகிவிட்டது. காடுகள் மேடுகள் எல்லாம் உழைத்து களைத்துப்போன ஏழைமக்கள் வாழும் குடிசைப்பகுதிகளின் சந்து பொந்துகளிலெல்லாம் சந்தடியில்லாமல் நுழைந்து சாகசம் படைத்து அவர்தம் வாழ்க்கைத் தொடர்பை வலுவாக்கி வருவதும் செல்பேசிகளே. செல்போன்களின் சேவைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன. 2005 - ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகில் இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 126 கோடியாக இருந்தது என்றும் அது, நாளொன்றுக்கு 46000 பேர் வீதம் புதிதாக அதிகரித்து வருவதாகவும் கணக்கிட்டுள்ளனர்.

இங்ஙனம் பரவிவரும் செல்பேசிகளின் பயன்பாடுகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் கேடுகள் விளைவிக்கின்றன என்பதனை சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன. இயற்கையின் இயற்கையான கதிர்வீச்சுகளிடையே அறிவியல் கண்டுபிடிப்புகளாகிய ஒயர்லெஸ், ரேடியோ, டிவி, ரேடார், செல்போன்கள் இவைகளின் இயக்கத்தால் வெளிவிடப்படும் ரேடியோ அலைகள், கதிரியக்க அதிர்வுகள், நுண்ணலை அதிர்வுகள், நுண்ணலை கதிர்வீச்சுகள் போன்றவை உயிர்களின் மீது பல்வேறு தீயவிளைவுகளை உருவாக்கி வருகின்றன. இதில் இன்றைய செல்பேசிகளே அபரிமிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதனை அறிய முடிகிறது.

இதுபோலவே செல்பேசி "டவர்களும்" மிகவும் ஆபத்தானவை தான். அவற்றிலிருந்து வரும் பாதுகாப்பற்ற நுண்ணலை கதிர்வீச்சுகளில் சுமார் 60%, தலைப்பகுதிகளில் கிரகிக்கப்பட்டு, கொஞ்சம் மூளையினுள் ஊடுருவி செல்வதாக கண்டறிந்துள்ளனர்.

சிறுகுழந்தைகள் செல்பேசிகளை பயன்படுத்துவது மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதனையும் பிரிட்டீஷ் தேசிய கதிரியக்க பாதுகாப்புக்கழகம் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது. பெரியவர்களைவிட குழந்தைகளை 3.3 மடங்கு கதிர்வீச்சுகள் அதிகமாக பாதிக்கின்றன என்றும், குழந்தைகளின் மண்டைஓடுகள் மிகவும் மெல்லிய தன்மையுடையதாக இருப்பதால் அவை ஆபத்தான கதிர்வீச்சுகளினால் எளிதாக பாதிக்கப்படுவதால் 30 முதல் 40 வயதிற்குள் பெரும்பாலோருக்கு மூளைக்கட்டிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் உறுதிபடுத்தியுள்ளனர்.

செல்பேசிகளின் தீயவிளைவுகள் பற்றி பல்வேறு நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் தீவிர ஆய்வுகளில் பல உண்மைகள் வெளியாகி உள்ளன.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த "ராப்பாபோல்ட் மருத்துவ அறிஞர்கள் அமைப்பு" செல்பேசி கதிர்வீச்சுகளை விலங்குகளில் பரிசோதனை செய்ததில் அவற்றின் கண்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். கண்களுக்கு அருகில் செல்பேசி கதிர்வீச்சு செல்லும்போது வெப்பநிலை சுமார் 3டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதால் கண்புரை நோய்கள் எளிதில் (Cataract) உருவாவதனை கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்க அறிவியலறிஞர்கள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின்படி செல்பேசி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலோர் ஆண்மைக்குறைவு, விந்தணுக்குறைவு, மகப்பேறின்மை போன்ற ஆபத்திற்குள்ளாவதை கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் மும்பையைச் சேர்ந்த மருத்துவ அறிஞர்களும் பல்வேறு ஆய்வுகள் மூலம் இதை தெளிவுபடுத்தியுள்ளனர். சாதாரணமான மனிதர்களைவிட நாள்தோறும் குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் செல்பேசிகளை பயன்படுத்துவோரின் விந்தணு எண்ணிக்கை 25% குறைவாகவே காணப்படுவதனை அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன.

அமெரிக்க ஓஹியோவின், கிளீவ்லேண்ட் இனப்பெருக்க மருத்துவ ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் அசோக் அகர்வால் விலங்கினங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி விந்தணுக்களை உருவாக்கும் செல்கள் மின்காந்த கதிர்வீச்சுகளினால் அல்லது அதனால் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாதிக்கப்படுவதனை கண்டறிந்து வெளியிட்டார். செல்பேசிகளை இடுப்பு பகுதியில் வைத்திருப்பவர்களின் அடிவயிறு, தொடையிணைப்பு பகுதிகள் எளிதில் சூடாவதும் இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாகும்.

அன்னாள் நரம்பியல் ஆய்வுகளும், டாக்டர் பாவ்லோ ரோஷினியின் ஆய்வுகளும் செல்பேசி கதிர்வீச்சுகள் மூளைசெல்களை தூண்டுகின்றன என்பதனை வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய தூண்டுதல்கள் காக்கைவலிப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.

சுவீடன் தேசிய உழைப்பாளர் வாழ்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வாளர்களின் அறிக்கையின் படி 2000 மணி நேரத்துக்கு மேல் செல்பேசியை பயன்படுத்திய 905 முதியவர்கள் மூளைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை வெளிப்படுத்தியுள்ளனர். சாதாரணமாக செல்பேசி பயன்படுத்தாதவர்களை விட 3.7 மடங்கு அதிகமாக செல்பேசி பயன்படுத்துவோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் ஒப்பிட்டுள்ளனர்.

இலண்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - மூன்று பிரிட்டிஷ் பல்கலை கழகங்களுடன் சேர்ந்து நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் படி அதிக செல்பேசி பயன்பாடு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதை கண்டறிந்துள்ளனர்.

எனவே செல்பேசி பயன்படுத்துவோர் குழந்தைகளிடம் செல்பேசிகளை கொடுப்பதை தவிர்க்கவும்.

செல்பேசி வைத்திருப்போர் கவனத்திற்கு :

பேசும்போது உடலுக்கு சற்று தொலைவில் வைத்து பேசுவதும், வாய்ப்புகள் உள்ளபோது சாதாரண தொலைபேசிகளை பயன்படுத்துவதும். வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக செல்பேசி தொடர்புகளை தவிர்ப்பதும், அதிகமாக சூடாகும் வரை பேசுவதை தவிர்ப்பதும். செல்பேசி பயன்படுத்துபவருக்கு மிகவும் பாதுகாப்பானதாகும்.

3700 ஆண்டுகளுக்கு முன்… தமிழர் நாகரீகம்.

0 கருத்துகள்
TwitThis




தமிழின் தொன்மை வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது என்கிறார் தொல்லியல் ஆய்வாளரும், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான டி.கே.வி.ராஜன். அதற்கான ஆதாரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில், ஆதிச்சநல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பண்டைப் பொருட்கள் பற்றிய கண்காட்சி ஒன்றினை நடத்தியிருக்கிறது. அவரால் நிறுவப்பட்டிருக்கும் இந்தியன் சயின்ஸ் மானிட்டர் என்ற அமைப்பு.

திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் 24 கி.மீ. தென்கிழக்கில் அமைந்துள்ளது ஆதிச்ச நல்லூர். இங்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு நடத்திய தொல்லியலாளர் அலெக்சாண்டர்ரீ ஆதிச்சநல்லூர் மனித நாகரீகத்தின் தொட்டில் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவ்விடத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற அகழவாய்வுகள் அறிவியல் ரீதியில் விளக்கத்தக்க உண்மைகளை உலகுக்குக் காட்டியிருக்கின்றன. ஆதிச்சநல்லூரில் பல முதுமக்கள் தாழிகளும், பானை ஓடுகளும் மண்பானை வகைகளும் அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இந்த பானை ஓடுகளை, காலத்தைக் கணிக்கும் நவீன அறிவியல் முறையான தெர்மோ லூமினெசன்ஸ் என்ற முறையில் ஆய்வுக்குட்படுத்தினர். இதன் முடிவு பானைகளின் காலம் கி.மு.1700 ஆண்டுகள் என்று கூறுகிறது.

அதாவது 3700 ஆண்டுகளுக்கு முந்தைய ஓடுகள் அவை என்பது உறுதியாகியிருக்கிறது.

இந்தக் காலத்தைக் கணித்த அறிவியலார், இதுவரை கிடைத்த பானை ஓடுகளில் இதுவே மிகப்பழைமையானது என்பதால் மண் பாண்டங்கள் செய்யும் தொழில் முறை தமிழகத்தில் இருந்துதான் உலகுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள். கி.மு.1700 என்பது கடைசிகட்ட காலமே! அதற்கு பல நூற்றாண்டுகள், முன்பே இந்தத் தொழில்முறை உருவாகியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

மேலும், இங்குக் கிடைத்திருக்கும் வெண்கல பாண்டங்களை ஆய்வு செய்யும் போது, உலோகங்களை உருவாக்க அடிப்படையான ஆர்சனிக்கைப் பயன்படுத்தியிருப்பது தெரிய வருகிறது. இந்த முறையை மொகஞ்சதாரோ ஹரப்பா மக்களும் பயன்படுத்தியிருக்கின்றனர். எனவே, கால அளவில் ஆதிச்சநல்லூரும், ஹரப்பாவும் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன என்கிறார் ராஜன். சிந்து சமவெளி நாகரீகம் என்பது திராவிடர் நாகரீகமே என்ற கருத்தை மறுக்க, மாற்றியெழுதத் துடிக்கும் பார்ப்பன ஆய்வாளர்களுக்கு சரியான பதிலடியாக இது அமைந்திருக்கிறது. சிந்து நாகரிகத்தில் கிடைத்த ஓவியங்களில் காளையைக் குதிரையாக்கி அதை ஆரிய நாகரிகமென்று நிறுவத்துடிப்போருக்கும் இத்தகைய ஆதாரங்கள் பதில் தருகின்றன.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்பானை ஓடுகளின் மீதான ஓவியம் தான் இதுவரை இந்தியாவில் கிடைத்துள்ள ஓவியங்களில் மிகப் புராதனமானது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது ஆதிச்ச நல்லூர் ஒரு பெரிய வியாபார ஸ்தலமாக இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. அதேபோல இந்த ஓவியங்களில் இருக்கும் பொருள் சங்க இலக்கியமான பரிபாடலின் கருத்தை ஒட்டிவருகிறது. எனவே, 3700 ஆண்டுகளுக்கு முந்தையதாக சங்க இலக்கியத்தின் காலமும் இருந்திருக்க வேண்டும். எனவே, கடைச்சங்கம் என்பதை கி.மு.3ஆம் நூற்றாண்டு என்பதாக நாம் இப்போது தவறாகக் கணித்து வருகிறோம் என்று பொருள். எனவே, அதற்கு முந்தைய முதற்சங்கம், இடைச்சங்கம் என்பதன் காலமெல்லாம் திருத்தி யெழுதப்பட வேண்டியவையே. அவை இன்னும் பழங்காலத்தவையே என்ற வரலாற்றுண்மையை அறிவியல் முடிவுகளோடு நாம் உலகுக்கு சொல்ல வேண்டிய காலகட்டம் இது என்று மீண்டும் எடுத்துரைக்கிறார் அவர்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்பாண்ட, வெண்கலப் பானைகளைக் கொண்டு 100 ஆண்டுகளுக்கு முன் தன் ஆய்வின் நிறைவில் அய்ரோப்பாவில் கண்காட்சியாக வைத்தாராம் அலெக்சாண்டர்ரீ. அப்போது, கருப்பர் நாட்டில் இத்தனை ஆண்டுகளுக்கு முன் இப்படியொரு வளர்ச்சியா என்று வெள்ளையர்கள் வியந்தனராம்.

மேலும், அங்குக் கிடைத்த எலும்புத்துண்டுகள் மண்டை ஓடுகள் இவற்றைக் கொண்டு பார்க்கும் போது ஆதிச்ச நல்லூரில் வாழ்ந்த ஆண்கள் சுமார் 6 அடி உயரத்துடனும், பெண்கள் 5 அடி 4 அங்குலம் வரையிலும் இருந்திருக்கிறார்கள். நல்ல உறுதியான உடல் வளத்துடன் தான் தமிழனும், தமிழச்சியும் இருந்திருக்கிறார்கள் என்பதை இவற்றைக் கொண்டு உறுதி செய்ய முடிகிறது.

அங்குக் கிடைத்த மண்டை ஓட்டில் துளை ஒன்று இருக்கிறது என்று அதைச் சுட்டிக்காட்டிய திரு.ராஜன் அது நோயாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. ஆனால் அந்த எலும்புக் கூட்டின் வயது 65 ஆண்டுகள். நோயிருந்தால் அவ்வளவு காலம் வாழ்ந்திருக்க முடியுமா என்பது சந்தேகம். அதனால் அது மூன்றாவது கண்ணாக இருக்குமோ என்றும் சிலர் சந்தேகம் கிளப்புகிறார்கள். உடனே நீங்கள் திருவிளையாடல் சிவனுக்குப் போய் விடாதீர்கள். இது அறிவியலால் நிரூபிக்கவிடவில்லை. அதுவரை இது ஒரு சுகமான கற்பனையே! ஆனால் அவர்களால் காதுகளை தன்னிச்சையாக ஆட்ட முடியுமாம். அதற்கான உடற்கூறு இருப்பதை அறிவியல் உறுதி செய்கிறது. ஆதிச்சநல்லூரின் அழிவு எதனால் நிகழ்ந்ததென்று தெரியவில்லை. அவர்களுடைய எலும்புகளில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருக்கின்றன. கடும் போர் கூட அழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிட்ட திரு.ராஜன் ஆதிச்சநல்லூரின் மக்களின் உடற்கூறுகளையும், லெமூரியாக் கண்டத்தின் மக்கள் இப்படி இருக்கக்கூடும் என்று நம்பிய உடற்கூறுகளும் ஒத்துப் போகிறது என்ற கூடுதல் தகவல்களையும் சொன்னார்.


லெமூரியா என்பது லெமூர் என்ற விலங்கின் பெயரைக் கொண்டு உருவானது. லெமூர் என்பது நம்மூரில் இப்போது மிகவும் குறைந்துவிட்ட தேவாங்கு எனப்படும் விலங்கைப் போன்றது. இந்தத் தேவாங்கு விலங்கினம், தமிழகத்தில் இருக்கிறது. அதே போல மடகாஸ்கரில் இருக்கிறது. இடையில் எங்கும் இல்லை. இவ்வளவு கடற்பரப்பை நீந்தியா கடந்திருக்க முடியும்? என்ற கேள்வியின் அடிப்படையில் தான் லெமூரியா என்ற சிந்தனை பிறந்தது. ஆனால் நம் பழந்தமிழ் இலக்கியங்களில் அழிந்துவிட்ட கபாட புரமும், தென்மதுரையும், பஃருளியாலும் பரவிக்கிடக்கின்றன.

லெமூரியா என்பது கற்பனை என்று வாதிடுவோரும் சிலர் இருக்கிறார்கள். ஆனால், கன்னியாகுமரிக்கும், மடகாஸ்கருக்கும் நடுவே பயணம் செய்த கப்பல் ஒன்று. கடலுக்கடியில் நிறைய புவியியல் இடையூறுகள் (னுளைவரசயெஉநள) இருப்பதை உணர்ந்து சொல்லியிருக்கிறது. முறையான கடலாய்வு மேற்கொண்டால் அது பற்றிய தகவல்கள் நிறையக் கிடைக்கக்கூடும். இன்றும் பெர்முடா முக்கோணம் பற்றிய ஆய்வை பலர் மேற்கொண்டு வருகிறார்கள். இன்றைய அறிவியல் வளர்ச்சியில் லெமூரியா எனப்படும் குமரிக்கண்ட ஆய்வு சாத்தியப்படக் கூடிய ஒன்று தான்.

அண்மைக் காலத்தில் சங்க காலத்து அரசர்களின் இலச்சினை மற்றும் பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன. சேரன், செங்குட்டுவனின் அரிய காசு ஒன்றை நாணயவியல் ஆய்வாளர் இரா. கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் ரோமானியர் வருகைக்குப்பின் தான் நாணயப் புழக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்பு பண்டமாற்று முறைதான் இருந்தது என்று நாம் நினைத்திருந்த வரலாறு மாறுகிறது. அதைத் திருத்தி எழுத வேண்டியதன் அவசியமும் வலுப்படுகிறது என்கிறார் உறுதியாக! வடநாட்டு ஆய்வாளர்களும், இந்தியத் தொல்லியல் துறையும் தென்னாட்டின் அகழாய்வில் விருப்பம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கிறது. சமஸ்கிருதத்தையும், வேத நாகரிகத்தையும் முன்னிறுத்தக்கூடிய வடநாட்டு முயற்சிகளுக்கு சரியான பதிலடியும், உண்மையான வரலாற்றை எடுத்துரைப்பதும் விரிவான அகழாய்வுகளை தமிழ்நாட்டில் நடத்துவதன் மூலமே சாத்தியப்படும்.



உலகின் முன் தோன்றிய மூத்த குடி என்று வெறும் சங்க இலக்கியங்களில் பெருமை கொள்வதல்லாமல், அறிவியல் மற்றும் வரலாற்று அடிப்படையில் அதை நிறுவுவதே அறிவார்ந்த செயலாகும்.

நன்றி - உண்மை இதழ். எப்படி தமிழன் வரலாறு
படித்துவிட்டு கருத்தை பதியவும்           நன்றி
 

Free Blog Templates

Powered By Blogger

Easy Blog Trick

Powered By Blogger

Blog Tutorial

Powered By Blogger

Twitter Blog Templates © Copyright by தமிழ் இனிய உலகம் | Template by BloggerTemplates | Blog Trick at Blog-HowToTricks